பீகார் மாநிலம், பாட்னாவில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (27-05-24) அந்தக் கல்லூரிக்குள் முகமூடி அணிந்து அடையாள தெரியாத சில மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞரை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், அங்கிருந்த மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து சிதறி ஓடினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சில மாணவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக படம் எடுத்தனர். இதனையடுத்து, ஹர்ஷ் ராஜை கடுமையாக தாக்கிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஹர்ஷ் ராஜை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில், போலீசார் நடத்திய விசாரணையில், ஹர்ஷ் ராஜுக்கும், சந்தன் யாதவ் என்ற மாணவருக்கும் அடிக்கடி குழு மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல், ஒரு கட்டத்தில் கொலை செய்யும் நோக்கத்தில் முடிந்துள்ளது. இதில் கோபமடைந்த சந்தன் யாதவ் கும்பல், கல்லூரிக்குள் வந்துஹர்ஷ் ராஜை, கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தன் யாதவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஹர்ஷ் ராஜ்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.