மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் பட்டியலின இளைஞர். இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ததையடுத்து, திருமண ஊர்வலத்தின் போது மணமகனை குதிரை வண்டியில் ஏற்றிச் செல்ல மணமகனின் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டுகொள்ளாத மணமகனின் குடும்பத்தினர், குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்து மணமகனை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்று ஊர்வலமாக அழைத்துச் சென்று திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திருமணம் முடிந்த பிறகு, குதிரை வண்டியின் ஓட்டுநரும், குதிரை பராமரிப்பாளர்கள் உள்பட 3 பேர் குதிரை வண்டியை எடுத்து திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரத்னேஷ் தாக்கூர் மற்றும் சிலர் அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குதிரை வண்டி மட்டுமல்லாது குதிரை மீதும் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியை காட்டியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.