காதலியைக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் சாலையில் காதலன் அமர்ந்திருந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் தினகரன் பனாலா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நளமதி என்ற பெண்ணும் தினகரன் பனாலாவும் காதலித்து வந்துள்ளனர். லீலாவும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
லீலாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினகரன் பனாலா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதல் வேண்டாம் என அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லீலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். முதலில் திருமணம் வேண்டாம் என மறுத்த லீலா பெற்றோரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இதை காதலன் தினகரனிடம் சொல்ல, தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறாயா என எச்சரித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனாலாவை சந்திப்பதையும் லீலா தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று லீலா பணியாற்றும் அலுவலகத்திற்குச் சென்ற தினகரன், திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துள்ளார். ஆனால் லீலா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக லீலாவை குத்திக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த லீலாவின் உடலுக்கு அருகிலேயே தினகரன் அமர்ந்திருந்தார். சாலையில் வெட்டவெளியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கும் சடலத்துடன் இளைஞர் அமர்ந்திருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் லீலாவின் உடலில் 16 முறை கத்திக்குத்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.