64 வயதான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ரஞ்சன் கோகாய், சில முக்கிய வழக்குகளை வரும் வாரங்களில் கையாள உள்ளதால் கூட இது போல குற்றச்சாட்டுகள் எழலாம் என கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாகவும், தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் தெரிவித்தார். இதுகுறித்த ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி கருத்து கூறியுள்ள உச்சநீதிமன்றம், "நாட்டை யாரேனும் திருத்த நினைத்தால் ஒன்று கொல்லப்படுகிறார்கள். இல்லையென்றால் அவர்களை பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது" என கடுமையான எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.