கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகளில் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை கைவிட்டு சற்று விலகி நடந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே மூடத்தனமான நம்பிக்கையின் மூலம் சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்வியாளர்களாக இருக்கக்கூடிய, படித்த பெற்றோர்களே செய்திருக்கும் இந்த மூடத்தனமான செயல், ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித்துறையில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலக்கியா என்ற மகளும், 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
அலக்கியா எம்பிஏ படித்துவிட்டு போபாலில் வேலை செய்துவருகிறார். அதேபோல் இளைய மகளான திவ்யா இசைப் பள்ளியில் இசை பயின்று வருகிறார். இப்படிப் படித்தவர்கள் நிறைந்த இந்த குடும்பத்தில், நரபலி சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புருஷோத்தமன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அங்கு மூத்த மகள் அலக்கியாவும், இளைய மகள் திவ்யாவும் நிர்வாண நிலையில் உடல் முழுவதும் மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்த போலீசார், இதுகுறித்து பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போதுதான் தெரியவந்தது இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த இருவரின் தலையும் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மகள்களையும் அடித்து அமர வைத்து பூஜை செய்த பெற்றோர், உடற்பயிற்சி செய்யக்கூடிய தம்பிள்ஸ் கருவியைக் கொண்டு அவர்களை தாக்கி அடித்துக் கொலை செய்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இன்று இரவு முதல் அவர்கள் இருவருடைய கலியுகம் முடிவதாகவும், சூரிய உதயத்திற்குப் பிறகு சத்திய யுகத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு மகள்களும் உயிர் பெறுவார்கள் என்றும் காவல்துறையினரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
மேலும், நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு மகள்களின் உடல்களையும் எடுக்க விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் ஆந்திரா சித்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.