மழை மற்றும் பனி காலங்களில் கரோனா தோற்று வேகமெடுக்கலாம் என ஐ.ஐ.டி. மற்றும் எய்ம்ஸ் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாகப் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618லிருந்து 11,18,043ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423லிருந்து 7,00,087ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பருவநிலையைப் பொறுத்து கரோனா பரவல் எப்படி இருக்கும் என புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி. -யும், எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு முடிவுகளில், "21-ஆம் நூற்றாண்டில் 2003-இல் பரவிய சார்ஸ் வைரஸ், 2009-இல் பரவிய ஏஹெச்1என்1 இன்ப்ளூயன்ஸா வைரஸ், தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் போன்றவை பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பரவும் வேகத்தில் மாற்றத்தைச் சந்திப்பவையாகும். அந்த வகையில் காலநிலையில் ஏற்படும் மாற்றம், கரோனா வைரஸ் பரவும் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் குளுமையான காலநிலை நிலவும் காலகட்டத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழல் ஏற்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயிலில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கூட 0.99 சதவீதம் கரோனா பரவும் வேகம் குறையும், இரட்டிப்பு ஆவது 1.13 நாள் அதிகரித்து, கரோனா பாதிப்பைக் குறைக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.