உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கெதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய காலரா, குடல் நோய்கள் நிறுவனம், வாய் வழியாக உட்கொள்ளும் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கான ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்ப துறையிடம், இந்த ஆய்வு குறித்த திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. ஜெர்மன் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தேசிய காலரா, குடல் நோய்கள் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு குறித்து தேசிய காலரா, குடல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் சாந்தா தத்தா கூறுகையில், "வாய்வழி தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்கான திட்டத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இந்த ஆய்வு ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும், திட்டம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் தொடங்கும்" எனக் கூறியுள்ளார். மேலும் இந்த வாய் வழி தடுப்பு மருந்தை உருவாக்க 5-6 வருடங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளார்.