முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சஞ்சய் பாப்ளியின் வீட்டில் இருந்து ஏராளமான வெள்ளி, தங்க நாணயங்கள், பணம், மொபைல் போன் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சய் பாப்ளியின் மீது எழுந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அவரது இல்லத்தில் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கார்த்திக் பாப்ளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தனது மகனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக சஞ்சய் பாப்ளியின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சண்டிகர் எஸ்எஸ்பி, விசாரணை அதிகாரிகள் சஞ்சய் பாப்ளியின் வீட்டிற்கு சென்ற போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும் விசாரணையில் கார்த்திக் பாப்ளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் பாப்ளியின் வீட்டில் இரண்டு கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, நான்கு ஐஃபோன்கள், மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.