உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்றோடு மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகள் இரண்டாவது இடத்திற்கே போட்டியிடுகின்றன என தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு பிறகு யோகி ஆதித்யநாத்தை தான் பாஜக பிரதமர் பதவியில் அமரவைக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறி வரும் நிலையில், பிரதமராக ஆசை இருக்கிறதா என யோகி ஆதித்யநாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”நான் பாஜகவின் சாதாரண தொண்டன். கட்சி எனக்குக் கொடுத்த பணியைச் செய்கிறேன். நான் எந்தப் பதவியையும் நாற்காலியையும் தேடி ஓடியதில்லை” எனத் தெரிவித்தார்.
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டதை அகிலேஷ் யாதவ், ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த யோகி ஆதித்யநாத், ”இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையிலெடுத்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் தலையீடு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.