ஆந்திரப் பிரதேச மாநிலம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், ராணி திருமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திவ்யாவுக்கும் அவர் பணிபுரிந்து வந்த அதே ஹோட்டலில் பணிபுரியும் ஜெயானந்தபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஜெயானந்தபால், சித்தூர் மாவட்டம் கல்லூர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயானந்தபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையில், திவ்யாவின் கணவர் சந்திரய்யா, நான்தான் ஜெயானந்தபாலை கொலை செய்தேன் என கல்லூர் கிராம வருவாய் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, கல்லூர் கிராம வருவாய் அதிகாரி, சந்திரய்யாவை பிடித்து காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திவ்யாவுக்கும், ஜெயானந்தபாலுக்குமான உறவை அறிந்த சந்திரய்யா, திவ்யாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவருக்குமான உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதனால், சந்திரய்யா ஜெயானந்தபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சந்திரய்யா போட்ட திட்டத்தின்படி, ஜெயானந்தபாலை சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூருக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் அங்கு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருந்த ஜெயானந்தபாலை, அங்கு இருந்த பாறாங்கல்லை கொண்டு சந்திரய்யா அடித்து கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்திரய்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.