![The husband tried to kiss her to stop the fight; The wife who bit her tongue and spit it out](http://image.nakkheeran.in/cdn/farfuture/8S_DCorLcRNOSc-5SjrBZbdkFM_CLwOMZkyfe90LaNM/1690025792/sites/default/files/inline-images/a636.jpg)
ஆந்திராவில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்ட மனைவியை சமாதானப்படுத்த கணவர் முத்தமிட முயன்ற நிலையில், மனைவி கணவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த். இவருடைய மனைவி புஷ்பாவதி. இந்த தம்பதியர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகளுக்காக சண்டையிட்டுக் கொள்வதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையாகத் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே வழக்கம்போல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சண்டை வாக்குவாதமாக முற்றிய நிலையில், பிரச்சனையை முடிக்க முயன்ற கணவர் தாராசாந்த் மனைவியின் முகத்தைப் பிடித்து அவருக்கு உதட்டில் முத்தமிட முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரத்திலிருந்த மனைவி புஷ்பாவதி கணவரின் உதடு மற்றும் நாக்குப் பகுதியைப் பலமாகக் கடித்து இழுத்துள்ளார்.
இதனால் உதடு மற்றும் நாக்குப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்டு, சிதைந்து தொங்கிய நாக்குடன் தாராசாந்த் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாராசந்த்தின் மனைவியை விசாரித்தனர். விசாரணையில், தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதால், வலுக்கட்டாயமாக நாக்கைக் கடித்து இழுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்படி ஒரு வினோத சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.