இந்த விஞ்ஞான யுகத்திலும் நரபலி கொடுப்பது, புதையல் எடுப்பது எனக் கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட அதிர்ச்சி தரும் சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறத் தான் செய்கிறது. ஆனால் தனக்கு தானே தலையை வெட்டி தம்பதி ஒன்று நரபலி செய்துக்கொண்ட சம்பவம் குஜராத்தில் மூடநம்பிக்கையின் உச்சத்தை தொட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா எனும் கிராமப் பகுதியில் வசித்து வந்தனர் ஹேமுபாய் மக்வானா-ஹன்சாபென் தம்பதியினர். வயல்வெளி நிறைந்த குடிசை பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இந்த தம்பதி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் நரபலி பூஜை ஒன்றை தொடங்கியுள்ளனர். யாக குண்டம் அமைத்து நெருப்பை மூட்டியுள்ளனர். தங்களது தலையை எரியும் யாக குண்டத்தில் போடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
தங்களின் தலை வெட்டப்பட்டு யாக குண்ட நெருப்பில் விழும் வகையில் பிரத்தியேக இயந்திரத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இருவரின் தலையையும் கயிற்றால் கட்டி அந்த இயந்திரத்தை வைத்து கயிற்றைத் தளர்த்தினால் தலை தானாக துண்டாகி யாக குண்டத்தில் சரியாக விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தை இயக்க, திட்டமிட்டபடியே இருவரின் தலைகளும் வெட்டப்பட்டு யாக குண்டத்தில் விழுந்தது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் போலீசார் நரபலி பூஜை கொடுக்கப்பட்ட இடத்தில் சோதனை செய்தனர். அப்பொழுது நரபலி பூஜையை மறைப்பதற்கு கட்டப்பட்ட தற்காலிக மறைப்பில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் தங்களின் இரு குழந்தைகளையும் பெற்றோர்களையும் நல்ல முறையில் பராமரிக்கும்படி அந்த தம்பதி எழுதியிருந்தனர். இந்த நரபலி சம்பவம் குறித்த முழு விவரமும் வெளிவர, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.