நாசிக்கில் நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்த கடை ஒன்றில் மூளை உள்ளிட்ட மனித உறுப்புக்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத கடையில் இருந்து மனித மூளை, கண், காது மற்றும் இதர உடல் உறுப்புக்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசவே இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த அறையைத் திறந்த போது மனித உடல் உறுப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாநில அரசு, காவல்துறையின் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்படி இந்த கடையின் உரிமையாளருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவ மாணவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மாணவர்கள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு இந்த சட்டவிரோத காரியத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
மேலும் அந்த அறையில் மனித உடல் உறுப்புக்கள் கெமிக்கல் மூலம் பதப்படுத்தப்பட்டுள்ளதால் சமூக விரோதிகள் இந்த காரியத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.