கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிங்கப்பூரில் பரவி வரும் புதியவகை கரோனா, இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்றும், எனவே சிங்கப்பூருடனான வான்வழி தொடர்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை காரோனா குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுவதுடன், அது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். எனவே சிங்கப்பூருடனான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதில் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.