ஆந்திர மாநில முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். இதனைத் தொடர்ந்து இவர், கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.
இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் ஷர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கிடையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜு நேற்று (15-01-24) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் எழுதிய அந்த கடிதத்தில், ராஜினாமா செய்வதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் புதிய தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.