18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் அஜய் ராஜ் 4 லட்சத்து 60 ஆயிரத்து 457 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை பிரதமர் மோடி 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. இந்தப் பாசத்திற்காக நான் தலைவணங்குவதுடன், கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.