பெங்களூரு மாநகராட்சியில் கரோனா பதித்த 3,338 பேரைக் கண்டறிய முடியவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளது அந்நகர மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,83,156ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,743 ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,704 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களிலும் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த தொற்று பரவல், தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் கரோனா வைரஸை, சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய பெங்களூருவில், தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், "பெங்களூருவில் கடந்த 14 நாட்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,000 -ல் இருந்து 28,000 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் 3,338 பேரை இதுவரை கண்டறிய முடியவில்லை. பரிசோதனையின்போது அவர்கள் தவறான முகவரி, தொலைபேசி எண் கொடுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிலர் தங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தும், வீட்டை விட்டு வெளியே சென்று விடுகின்றனர் அல்லது தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் கரோனா நோயாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.