புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்று ரெஸ்டோ பார் ஒன்றை துவங்கியது. அப்பகுதியில் ரெஸ்டோ பார் வந்தால், அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவார்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலையும், பொது அமைதி கெடும் எனக்கூறி அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி நேற்று முன் தினம் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டு, நேற்று பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பலரும், பாருக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரின் உள்ளே பாடல்கள் ஒலிக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட ரெஸ்டோ பார் உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், திடீரென முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில், அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சேர், கண்ணாடி மற்றும் பொருள்களை உடைத்து எறிந்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது காவல்துறையினரின் முன்னிலையிலேயே வையாபுரி மணிகண்டன், மதுபான ரேஸ்ட்ரோ பாரினை அடித்து உடைத்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.