ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டம்!
மத்திய அரசு ஏதாவது ஒருவகையில் இந்தி மொழியை பொதுவான மொழியாக மாற்றிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதனை பல்வேறு அமைப்புகளும் எதிர்த்தபடியே இருக்கின்றன. இந்தவகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும், இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனத்தின் 13 கன்னட அமைப்புகளுக்கு தலைமைப்பொறுப்பு வகிக்கும் ராமசாமி, ‘இங்குள்ள ஊழியர்கள் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையில் கன்னடம் இடம்பெறாததை எண்ணி அதிருப்தியில் உள்ளனர். நாங்கள் கன்னடத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், உள்ளூர் மொழியான கன்னடத்திற்கு இடமே இல்லையென்றால் எப்படி? இங்கு தரமான மருத்துவமனை உள்ளது. ஆனால், இங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு கன்னடமே தெரிவதில்லை. மொழி தெரியாத ஒருவரிடம் நம் பிரச்சனைகளை எப்படி சொல்லமுடியும்?’ என தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ராமசாமி கூறியுள்ளார்.
- ச.ப.மதிவாணன்