நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். பதவியேற்ற கையோடு பெண்கள் ரிப்புடு ஜீன்ஸ் (கிழிந்த ஜீன்ஸ்) அணிவதை பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதனையடுத்து கண்டனங்கள் குவியவே, தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரினர். அதேநேரத்தில் பெண்கள் ரிப்புடு ஜீன்ஸ் அணிவது சரியானது அல்ல என மீண்டும் தெரிவித்தார்.
இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீரத் சிங் ராவத், வரலாற்றையே மாற்றி கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "மற்ற நாடுகளை விட கரோனா நெருக்கடியை கையாளுவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 200 வருடங்கள் நம்மை அடிமைப்படுத்திய, உலகையே ஆண்ட அமெரிக்கா தற்போது (கரோனாவை கட்டுப்படுத்துவதில்) போராடி வருகிறது" கூறினார்.
தொடர்ந்து அவர், அதிக ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அவர், "ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 குழந்தைகளை கொண்டவர்களுக்கு 50 கிலோ கிடைத்தது. 20 குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஒரு குவிண்டால் (100 கிலோ) கிடைத்தது. ஆனால் இப்போது நீங்கள் அதைப்பார்த்து பொறாமைப்படுகிறீர்கள். நேரம் இருந்தபோது நீங்கள் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டீர்கள். ஏன் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை" என்றார். மத்திய அரசு கரோனா நிவாரணமாக, ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கியதை குறிப்பிட்டு தீரத் சிங் ராவத் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
தீரத் சிங் ரவாத்தின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பரவி வருவதோடு, இணையவாசிகள் அவரது பேச்சை கிண்டல் செய்து வருகின்றனர்.