காற்று மாசு மற்றும் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களை மின் மையம் ஆக்குவதில் இந்திய அரசும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய நகர்ப்புற அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருப்பதாவது, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலையில் பயணிக்கும் வாகனங்களில் 25% வாகனங்கள் பேட்டரியில் இயங்கக்கூடியாதாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம்.
அதற்காக எலெக்ட்ரிக் சார்ஜிங் மையம் தொடர்பாக புதிய சட்ட விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் செயல்பட வேண்டும்.
மேலும் குடியிருப்பு நகர்ப்புறங்களில் 25 கி.மீ தொலைவுக்கு ஒரு சார்ஜிங் மையம் சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கனரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ தொலைவுக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.