Skip to main content

லவ் ஜிகாத் கொலை மிரட்டல்; ஜார்க்கண்டில் இருந்து கேரளாவுக்கு வந்த இளம் ஜோடி!

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

Hindu girl and Muslim boy marry in Kerala after facing threats in Jharkhand

திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகத்தினரை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்து வருகிறது. லவ் ஜிகாத்தை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், லவ் ஜிகாத் என்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாற்று சமூகத்தினரைச் சேர்ந்த தம்பதியினர், கேரளாவுக்கு தப்பிச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில, சித்தார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது காலிப். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இவரும், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆஷா வர்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 

மத வேறுபாடுகள் காரணமாக இவர்களது காதலை, அவர்களது குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டார் எதிர்த்துள்ளனர். மேலும், லவ் ஜிகாத் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கொலை மிரட்டல் போன்ற அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர். இதனால், கேரளாவில் உள்ள காலிப்பின் நண்பர்கள் அறிவுறுத்தியதை அடுத்து இளம்ஜோடி கேரளாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அந்த இளம்ஜோடி கடந்த 9ஆம் தேதி கேரளாவில் உள்ள ஆலப்புழா பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, பிப்ரவரி 11ஆம் தேதி உள்ளூரில் உள்ள மசூதியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், பிப்ரவரி 16ஆம் தேதி இந்து சடங்குகளைப் பின்பற்றி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தகவல் ஆஷாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, ஜார்க்கண்ட போலீஸுடன் அவர்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். ஆஷாவை திரும்பி வரச் சொல்லி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயன்றனர். ஆனால், ஆஷாவை சம்மதிக்க வைக்க முடியாமல், அவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர். 

சார்ந்த செய்திகள்