பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் அமைப்பின் 7ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்கின் 7ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டமானது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல வகையான பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துகள், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து என் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.