புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலமும் இந்தியும் இருந்து வருகிறது, இந்நிலையில் இனி வரும் காலங்களில் இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ஜிப்மர் இயக்குநரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்த நிலையில், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலின் உருவப்படம் மற்றும் சுற்றறிக்கை நகலை எரித்து போராட்டக்காரர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்தியை கட்டாயமாக்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு மற்றும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிப்மர் மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாவேந்தர் பாரதிதாசன் பேரன் கோ.பாரதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.