தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்திற்கு இந்த வருடத்தின் இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது.
கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே கடந்த இரண்டு முறையும் சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
அதேசமயம், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க. சார்பில், அம்மாநில பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தற்போது தெலங்கானாவில் பா.ஜ.க. செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியை கண்டித்து 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி அறிவித்தார். அதன்படி நேற்று ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், போலீஸ் அனுமதித்த நேரத்தையும் கடந்த கிஷன் ரெட்டி போராட்டத்தை தொடர்ந்ததால், அங்கு அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல், அந்த இடத்தில் அதிகமான பா.ஜ.க.வினர் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா போலீஸார் அனுமதித்த நேரத்தைக் கடந்து பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டியிடம் போராட்டத்தை முடிக்கும்படி கூறியது. ஆனால், அவர் தொடர்ந்து ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடத்தியதால் அவரை தெலங்கானா போலீஸ் நேற்று இரவு கைது செய்தது. பிறகு அவரை விடுவித்தது.
இந்தக் கைது குறித்து மத்திய அமைச்சரும், தெலங்கானா பா.ஜ.க. தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பக்கத்தில், “எங்களின் கைது கே.சி.ஆர்.-ன் தோல்வி. தெலுங்கானா மக்களின் உரிமைக்காக போராட்டம் தொடரும். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கவும், வேலையற்ற இளைஞர்களின் கவலைகளை கவனிக்காமல் புறக்கணிக்கவும் கே.சி.ஆர். அரசால் முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
Our arrest is your fall KCR garu..
the fight continues - for the rights of the people of Telangana.
KCR govt can't disrupt BJP's peaceful protest against his tyrannical rule and neglect to address the concerns of unemployed youth.. #BJPStands4Youth@BJP4Telangana pic.twitter.com/xHjXp4ID85— G Kishan Reddy (@kishanreddybjp) September 13, 2023