10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் ஸ்பீக்கர்களை வைத்து அதிகாலை அலாரம் வைத்து மாணவர்களை எழுப்பிவிட அரசு திட்டமிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தும் வகையில் கோவில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் ஸ்பீக்கர்களை வைத்து மாணவர்களை அதிகாலை 4.30 மணிக்கு எழுப்பிவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், குளிர்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு விடும் இரண்டு வாரப் பொது விடுமுறையையும் இந்த முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இந்த அலாரம் பொதுமக்களைப் பாதிக்கும் என்றாலும் மாணவர்களுக்கு இது பயன்தரும் முயற்சி எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதேசமயம், தற்போது வரை ஹரியானா அரசு மாணவர்களுக்கான பொதுத்தேர்விற்கான அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.