டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பு வகித்து வருகிறார். பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பளித்த இவர், நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், இன்று நடந்த ஒரு வழக்கின் போது வழக்கறிஞர் ஒருவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஒரு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கு உத்தரவின் விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். இதனை கவனித்த நீதிபதி சந்திரசூட், ‘நான் இன்னும் இந்த நீதிமன்றத்தின் பொறுப்பில் தான் உள்ளேன். நீதிமன்றத்தில் நான் என்ன கட்டளையிட்டேன் என்று நீதிமன்ற பதிவாளரிடம் கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது? நாளை நீங்கள் என் வீட்டில் இருப்பீர்கள், நான் என்ன செய்கிறேன் என்று எனது தனிப்பட்ட செயலாளரிடம் கேட்பீர்கள். வழக்கறிஞர்கள் அறிவை இழந்துவிட்டார்களா?. இது போன்ற செயல்களில் மீண்டும் முயற்சி செய்ய வேண்டாம்’ என்று கூறி கண்டித்தார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. இந்த வார தொடக்கத்தின் போது, ஒரு வழக்கு விசாரணையை தங்களுக்கு சாதகமான தேதிகளைப் பெறுவதற்கு வெவ்வேறு வழக்கறிஞர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய நீதிபதி சந்திரசூட், ‘ஒரு நீதிபதி கண் சிமிட்டினால், உங்களுக்கு சில தேதி கிடைக்கும். தலைமை நீதிபதி என்ற முறையில் எனக்கு இருக்கும் சிறிதளவு விருப்புரிமை உங்களுக்கு சாதகமாக ஒருபோதும் பயன்படுத்தப்படாது. நீங்கள், நீதிமன்றத்தை சவாரி செய்ய முடியாது’ என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.