இந்தியாவில் முன்னணியில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனம் (HCL COMPANY) "டெக் பீ" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் படி மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளதாக ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரப்படும் என தெரிவித்தார்.
இந்த திட்டம் சோதனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்த தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டதாகவும், அது சிறந்த பலனை கொடுத்ததால், அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறினார். தற்போது வரை 700 மாணவர்கள் பயிற்சி பெற்று தற்போது பணியில் உள்ளதாகவும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்தை விரைவுப்படுத்தப்படும் என கூறியுள்ளார். அதே போல் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாத ஊதியம் ரூபாய் 10,000 வழங்கப்படும் எனவும், பணியில் சேருவோர்களுக்கு ரூபாய் 20,000 முதல் 25,000 வரை ஊதியம் வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். இந்த "டெக் பீ" திட்டத்தில் சேர பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிறகு கணித பாடப்பிரிவில் சுமார் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நபர்கள் கட்டாயம் மூன்று ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணிப்புரிய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணைத்தலைவர் கூறினார். இந்தியாவிலேயே பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, ஐடி நிறுவனத்தில் அவர்களை பணியமர்த்தும் முதல் நிறுவனமாக ஹெச்.சி.எல் நிறுவனம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.