Skip to main content

தேர்தல் வெற்றி எதிரொலி; ராகுல் காந்திக்கு ஜிலேபி அனுப்பிய பா.ஜ.க!

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
haryana bjp sent jalebi to rahul gandhi

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் நேற்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, இம்முறையும் ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 

மூன்றாவது முறையாக தொடர்ந்து, ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததையொட்டி, அக்கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ஹரியானா பா.ஜ.க தலைமை, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் டெல்லி அலுவலகத்துக்கு ஜிலேபிகளை பார்சல் அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து ஹரியானா பா.ஜ.க தலைமை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘பா.ஜ.க ஹரியானா அனைத்து தொண்டர்கள் சார்பாக, ராகுல் காந்தியின் வீட்டிற்கு ஜிலேபி அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறி ஜிலேபி அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆர்டரை உறுதிப்படுத்தும் செயலியின் விநியோக புகைப்படத்தையும் இணைத்துள்ளது. 

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோஹானா பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர், “நான் காரில் ஜிலேபியை சாப்பிட்டு, என் சகோதரி பிரியங்காவுக்கு செய்தி அனுப்பினேன். இன்று நான் என் வாழ்க்கையின் சிறந்த ஜிலேபியை சாப்பிட்டேன். உங்களுக்காகவும் ஒரு பெட்டி ஜிலேபி கொண்டு வருகிறேன் என்று சொன்னேன். இது ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரின் இரத்தமும் வியர்வையும் சம்பந்தப்பட்டது. அவர் இந்த வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். 

இந்த ஜிலேபி இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும். அதன் பிறகு மற்ற நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இடங்களில் இந்த ஜிலேபி வெவ்வேறு வடிவங்களில் பரிமாறப்பட வேண்டும். இன்று 100 பேர் தங்கள் கடையில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த ஜிலேபி உலகம் முழுவதும் சென்றால், அவர்களின் தொழிற்சாலையில் 10,000 பேர் வேலை செய்வார்கள். ஜிலேபிகளை செய்ய தொழிற்சாலைகளை இங்கு அமைத்தால், பல ஆயிரம் இளைஞர்கள் வேலை பெறுவார்கள். 

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மோடி அரசின் கொள்கைகளால் மாது ராம் போன்ற ஜிலேபி விற்பனையாளர்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி ஜி இவர்களை ஒரு சக்கரவியூகத்தில் தள்ளியுள்ளார் முதலில் பணமதிப்பிழப்பு, பின்னர் ஜிஎஸ்டி, பின்னர் வங்கிகளில் உள்ள பணம் அனைத்தும் 2-3 பில்லியனர்களுக்கு வழங்கப்படுகிறது. “மாது ராம், வங்கியில் கடன் கேட்டால், வங்கி அவருக்கு அந்தக் கடனைத் தராது. அவர்களால் அதானிக்கும் அம்பானிக்கும் தான் பணம் கொடுக்க முடியும்” எனப் பேசினார். ஜிலேபி குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு, தேசிய அளவில் பேசுப்பொருளானது. ராகுல் காந்தி பேச்சுக்கு பா.ஜ.கவினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தான், ஹரியானா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க, ராகுல் காந்திக்கு ஜிலேபி அனுப்பி வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்