மகாராஸ்டிரா பேரவைக்கு 2014ல் நடந்த தேர்தலில் பாஜக தனித்து சில சில்லறைக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது. 260 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக வந்தது. பதிவான வாக்குகளில் 27.8 சதவீதம் வாக்குளை பெற்றது. சிவசேனாவும் தனித்தே 282 தொகுதிகளில் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றிபெற்றது. பதிவான வாக்குகளில் 19.3 சதவீதம் வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் கட்சி தனித்து 287 தொகுதிகளில் போட்டியிட்டு 42 தொகுதிகளையும் பதிவான வாக்குகளில் 18 சதவீதத்தையும் பெற்றது. தேசியவாத காங்கிரஸ் தனித்து 278 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதிகளையும் 17.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஹரியானா மாநிலத்தில் 2014 சட்டப்பேரவை தேர்தலில் அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக 47 இடங்களையும் 33.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. அகாலிதளம் 1 இடத்தை பெற்றது. முந்தைய தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 15 தொகுதிகளையும் 20.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. முந்தைய தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 31 இடங்களைப் பெற்ற இந்திய தேசிய லோக்தளம் 2014 தேர்தலில் 19 இடங்களையும் 24.1 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களையும் 3.6 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தையும் 4.4 சதவீத வாக்குகளையும் பெற்றன. 2014 தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் பாஜக வெற்றிபெற்றதை காணமுடியும். அதாவது மொத்தம் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 47 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அதாவது, பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவு இல்லாமலேயே ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது.
2014ல் நடைபெற்ற மகாராஸ்டிரா, ஹரியானா தேர்தல்களுடன் 2019 சட்டப்பேரவை தேர்தல்களை ஒப்பிட்டால் பாஜகவின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற மோடியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் மக்கள் சரியான பதிலை அளித்திருப்பதாகவே கருத வேண்டும்.
வெற்றிபெற்றதைப் போன்ற தோற்றத்தையும், மக்கள் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற பில்டப்பை மோடி ஊடகங்கள் மூலம் உருவாக்கினாலும், உண்மை நிலை அதற்கு மாறாக இருப்பதை மோடியும் அமித்ஷாவும் உணர்ந்தே இருப்பார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் மோடி இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதே நிஜம்.
நடந்து முடிந்த மகாராஸ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை தனித்தனியே போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதுபோலவே, காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த போட்டியில் கடந்த முறை 122 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 105 இடங்களையும் 25.8 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது. சிவசேனாவோ, 56 இடங்களையும் 16.4 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது.
இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் 15.9 சதவீத வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் 16.7 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கிறது. சுயேச்சைகளும் சிறியகட்சிகளும் சேர்த்து 29 இடங்களையும், 25.2 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
ஆகமொத்ததில் இந்தமுறை பாஜக கூட்டணி 42 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு எதிராக 58 சதவீதம்பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிஜம். பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கத்தில் சரிபாதி இடங்களையும் துணை முதல்வர் பதவியையும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போதே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்திருக்கிறார். அத்துடன் ஆட்சியையும் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்ளவும் நிபந்தனை விதிப்பார் என்று தெரிகிறது.
பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் சிவசேனாவை எதற்கெடுத்தாலும் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை மறைக்கப் பார்க்கிறார் மோடி. ஆனால், மகாராஸ்டிராவில் ஐந்து ஆண்டுகள் அரசியல் நிலைத்தன்மை கெடும் என்பதும், எதிர்க்கட்சிகளின் கை பேரவையில் ஓங்கியிருக்கும் என்பதும் உண்மை.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் அகந்தைக்கும், தேசியவெறியேற்றும் போக்கிற்கும் மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாடுமுழுவதும் நிலவும் பொருளாதார மந்தநிலை, வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சனை என்று எதையும் பாஜக விவாதிக்க மறுத்தது. மாறாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததையும், தேசிய குடியுரிமை பரிசீலனை சட்டத்தையும் தனது சாதனையாக மோடியும் பாஜக தலைவர்களும் முழங்கினார்கள்.
ஆனால், 18 மாநிலங்களில் பரவிய 51 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியதையும், இரண்டு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவும் அந்தக் கட்சியின் சர்வாதிகார மனப்பான்மைக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாஜகவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையையும், தேசிய வெறியையும் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். இனியேனும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தனது போக்கை பாஜக திருத்திக்கொள்ளுமா என்பது போகப்போகத்தான் தெரியும். காங்கிரஸையோ, மற்ற மாநில கட்சிகளையோ மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்துக்கும் சேர்த்தே இந்தத் தேர்தல்கள் மரண அடி கொடுத்திருக்கின்றன. மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக துடைத்தெறியப்படும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.