Skip to main content

நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் வழக்கு; நீதிபதிகளின் தீர்ப்பால் அதிர்ச்சி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Hadhras case that rocked the country; Shocked by the judges' verdict

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றாலும் கூட சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், கொலை நடந்து 6 நாட்களுக்குப் பின்பே வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் விசாரிக்கப்பட்டது. தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினார்.

 

இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, தன்னை நால்வர் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் (22), லவகுஷ் (19), ராம்குமார் (28), ரவி (28) ஆகியோர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கைதான 4 பேரில் 3 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

 

மேலும், 4 பேர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டையும் நிராகரித்த நீதிமன்றம் நால்வரில் ஒருவர் மட்டுமே கொலை செய்யும் நோக்கத்தில் அப்பெண்ணை தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தது. நால்வரில் அவர் மட்டுமே எஸ்.சி, எஸ்.டி பிரிவினைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்த சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ளோரை விடுதலை செய்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இது தொடர்பாக உத்தரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்