உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மத கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி நான்கு பேர் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்து வந்த அமைப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.