பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பிரம்மத் திவேதி. இவரது கொலை வழக்கில் முகமது அன்சாரி என்பவரும் ஒரு குற்றவாளி ஆவார். இவரின் உதவியாளர் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா. இதனால் பிரம்மத் திவேதி வழக்கில் சஞ்சீவ் ஜீவாவும் சம்மந்தப்பட்டு இருந்தார். இவர் மீது மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்திற்கு இன்று (07.06.2023) அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு இருந்த மர்ம கும்பலால் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சஞ்சீவ் ஜீவா கொல்லப்பட்டதுடன் ஒரு இளம்பெண்ணும் காயமடைந்துள்ளார். மேலும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போல் உடை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்து சஞ்சீவ் ஜீவாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.