கர்நாடகாவில் ஆட்சி யார் பக்கம் என்ற இழுபறியான நிலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே குழப்பத்தையும், எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்க, தற்போது ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு அழைப்புவிடுத்துள்ளார், நாளை காலை 9.30க்கு எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதலைச்சராக பதவியேற்க போவதாக செய்திகள் வந்துள்ளன.
காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி ஆளுநரை சந்தித்து 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் இன்று கொடுத்தார். அப்போது ஆளுநர் சட்டவிதிகள்படி, சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததாக குமாரசாமி பேட்டியளித்தார்.
அதேபோல் எடியூரப்பாவும் ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கான உரிமை கோரினார் இப்படி இருதரப்பிலும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவந்தநிலையில் தற்போது எடியூரப்பாவிற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்புவித்துள்ளார். அதுமட்டுமின்றி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடுவும் கொடுக்கப்பட்ட நிலையில் நாளை எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.