Skip to main content

இந்தியாவில் இனி ட்விட்டர் நிறுவனத்துக்கு இயக்குநர் இல்லை - தலைமை முடிவு!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

twitter

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய விதிகளைக் கொண்டுவர, அதன் காரணமாக மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் பெரிதானது.

 

மேலும், காங்கிரஸ் டூல்கிட் ஒன்றை வெளியிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றஞ்சாட்டிய விவகாரத்திலும் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் நீடித்தது. இதுமட்டுமன்றி உத்தரப் பிரதேசத்தைச் சேர்த்த முஸ்லிம் ஒருவரை சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடக்கூறி தாக்கியதாக வெளியான போலி வீடியோ தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் மணீஷ் மகேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அண்மையில் ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

 

இவ்வாறு இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் இடமாற்றத்திற்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், இந்திய ட்விட்டர் இயக்குநர் பதவியையே ரத்து செய்ய ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் பதவிக்குப் பதிலாக, இந்தியாவில் ட்விட்டரை வழிநடத்த தலைமை குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்