பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மதுபானங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகக் கள்ளச்சாராய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், பஞ்சாபின் அமிர்தசரஸ், படாலா, டார்ன் தரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 29 ஆம் தேதி முதல் தற்போது வரை அப்பகுதியில் 62 பேர் உயிரிழந்துள்ள சூழலில், அங்குப் போலி மதுபானம் தயாரித்து விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கள்ளச்சாராயத்தைக் குடித்தவர்கள் அனைவரும் உடலுறுப்புகள் செயலிழந்து பலியாகி உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.