விரும்பித்தான் செத்தார் வெமுலா!: மத்திய அரசு அறிக்கை வெளியீடு
ரோகித் வெமுலா தனிப்பட்ட காரணங்களால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்று மத்திய அரசின் விசாரணை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா. இவர் அந்த பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். இவருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.25,000 உதவித்தொகை நிறுத்தப்பட்டது. மேலும், அதே பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எழுப்பிய புகாரின் பெயரில் வெமுலா மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், விடுதியில் தங்குவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இதில் அரசியல் தலைவர்களின் நேரடித் தலையீடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி ரோகித் வெமுலா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மரணம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. தலித்துகளை ஒடுக்குவதால் இதுமாதிரியான தற்கொலைகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து ரோகித் வெமுலா தற்கொலை குறித்த விசாரணைக் கமிஷன் ஏகே ரூபன்வால் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்தக் கமிஷன் தற்போது தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு குறிப்பிட்ட ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. யாரும் அதற்கு பொறுப்பேற்க முடியாது. இந்தத் தற்கொலையில் கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ரோகித் வெமுலா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவரது தற்கொலைக் கடிதம் அவர் தன் சொந்தக் காரணங்களால் தான் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்