
மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (24-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த மக்களவைத் தேர்தல் மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான தேர்தல். ஏனென்றால், விலைவாசி உயர்வு, அதிக வேலையின்மை காரணமாக மக்கள் இன்று விரக்தியில் இருக்கிறார்கள். மேலும், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடக்கிறது.
பா.ஜ.க தன்னாட்சி அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்துகிறது. இதன் காரணமாக, மக்கள் அவர்கள் மீது கோபமடைந்து இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். அதனால் கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணி, பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.கவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் திறன் இந்தியா கூட்டணிக்கு உள்ளது. அனைத்து தொகுதிகளிலும், தோற்கும் பா.ஜ.க, 400 இடங்களுக்கு மேல் பெறுவது பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்படி தெரியும்? உதாரணமாக, கடந்த 2019 தேர்தலில், கர்நாடகாவில் எங்களுக்கு ஒரு இடம் கிடைத்தது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் நான்கு இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகலாத் ஜோஷி கூறினார். இது அதிகமா? அல்லது குறைவா?
சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த தெலுங்கானாவில், 2019இல் இரண்டு இடங்கள் கிடைத்தன. அங்கு காங்கிரஸின் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும். எங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் அதிக இடங்களைப் பெறுவோம். மகாராஷ்டிராவில் எங்கள் ‘அகாதி’ கூட்டணி 50 சதவீதத்துக்கு மேல் வெற்றிப்பெறும். எல்லா இடங்களிலும் பாஜகவின் இடங்கள் குறைந்து வரும்போது அவர்கள் எப்படி அதிகமாகப் பெறுவார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜஸ்தானில் நாங்கள் பூஜ்ஜியமாக இருந்தோம். இந்த முறை ஏழு முதல் எட்டு இடங்களைப் பெறப் போகிறோம். பாராளுமன்றத்தில் நாங்கள் இரண்டு இடங்களை வெற்றி பெற்றுள்ளோம். அங்கேயும் நம் எண்ணிக்கை கூடும். சத்தீஸ்கரில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் 100 சதவீதம் இருந்த இடங்களிலெல்லாம் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அவர்கள் எந்த அடிப்படையில் 400 இடங்கள் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா கூட்டணி, அதிக இடங்களைப் பெறுவதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன” எனக் கூறினார்.