சாலையில் வழி விடவில்லை எனக் கூறி தனக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய் (22/11/22) அன்று பிற்பகல் யெலஹங்காவில் இரண்டு மாநகரப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. தனக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தினை வழிவிடுமாறு அரசுப் பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். பேருந்திற்கு வழிவிட்டு பக்கவாட்டில் ஒதுங்கிய நபரை பேருந்தைக் கொண்டு ஓட்டுநர் மறித்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கி அவரது செல்போன் மற்றும் வண்டியின் சாவியையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
தனது செல்போனை வாங்க பேருந்தில் ஏறிய இளைஞரை பேருந்தின் உள்ளே வைத்து மீண்டும் தாக்கியுள்ளார். இளைஞரின் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக இளைஞரைத் தாக்கியுள்ளார். இதனை அப்பேருந்தில் பயணித்த சகபயணி வீடியோவாக எடுக்க, இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் யெலஹங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், இரு மாநகராட்சி பேருந்துகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றதாகவும் தனக்கு வழிவிடும் படி ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததாகவும் நான் வழிவிட்டு ஒதுங்கிய பின் பேருந்தினை என் குறுக்கே நிறுத்தி பேருந்தில் இருந்து இறங்கி தன்னைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயத்தில் ஓட்டுநர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தன்னை பார்த்து ஆபாசமாக விரலை உயர்த்தி சைகை காட்டியதாகவும், அதன் காரணமாகத்தான் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இது குறித்தான வீடியோ காட்சிகள் வேகமாக பரவ ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.