கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல!: ராகுல்காந்தி மீது யோகி காட்டம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தூய்மைக்கான பிரச்சார இயக்கத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல என ராகுல்காந்தியின் வருகை குறித்து விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைபாட்டால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று பார்வையிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ‘சுத்தமான இந்தியா - சுகாதாரமான உத்தரப்பிரதேசம்’ என்ற பிரச்சார இயக்கத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் யோகி, ஒரு இளவரசர் லக்னோவில் இருக்கிறார்; மற்றொரு இளவரசர் டெல்லியில் இருக்கிறார். டெல்லியைச் சேர்ந்தவர் கோரக்பூருக்கு வந்து, அதை சுற்றுலாத்தளமாக்கப் பார்க்கிறார். அவருக்கு இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி என்ன தெரியும்? நாங்கள் அவரது வருகையை அனுமதிக்க மாட்டோம்’ எனப் பேசினார்.
மேலும், ‘இந்தப் பிரச்சார இயக்கத்தில் மூளைவீக்கப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுகாதாரமின்மையும், சுத்தமற்ற குடிநீருமே இந்தக் கொடிய நோய்க்குக் காரணம். இந்த அரசு இதுபோன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளது’ என யோகி பேசினார்.
இந்தக் கொடிய உயிரிழப்புகளுக்குக் காரணம் முந்தைய அரசின் ஆட்சியே என குற்றம்சாட்டியுள்ள முதல்வர் யோகி, கோரக்பூர் பகுதியில் ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்