
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவர், கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றி வந்துள்ளார். 2017ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றப் பிறகு பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் தனது வீட்டில் ஓம் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். வயிறு, கை, மார்பு என 10 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை அடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓம் பிரகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி மற்றும் மகள் கிருதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஓம் பிரகாஷ் எப்போதும் துப்பாக்கியுடன் அடிக்கடி சுற்றித் திரிந்ததாகவும், அதை வீட்டினுள் எப்போதும் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய வாக்குவாதங்களின் போது கூட, துப்பாக்கியைக் காட்டி சுடுவதாக பல்லவியை ஓம் பிரகாஷ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி பல்லவிக்கும் ஓம் பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல் ஓம் பிரகாஷ் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து, மதிய நேரத்தில் மேசையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ஓம் பிரகாஷை பல்லவியை கத்தியால் குத்தினார்.
அதன் பிறகு, பல்லவியும் அவர் மகள் கிருதியும் ஓம் பிரகாஷை உடல் முழுவதும் பல இடங்களில் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, இருவரும் ஓம் பிரகாஷின் உடலை ஒரு படுக்கை விரிப்பில் சுற்றி, ஒரு அறையில் தங்களைப் பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது கொலை சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பல்லவி 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மகள் கிருதியை விரைவில் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த கொலை சம்பவத்தில், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓம் பிரகாஷை கொலை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மனைவி பல்லவி , கழுத்து அருகே நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை வெட்டுவது எப்படி? என்றும், அப்படி வெட்டுவதன் மூலம் ஒருவர் எப்படி இறக்கிறார்? என்று கூகுளில் தேடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.