தென்கொரியாவில் செய்யப்பட்டது போல, உடனுக்குடன் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவுகளைத் தெரிந்துகொள்ள, கேரள அரசு புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவில் செய்யப்பட்டதுபோல, உடனுக்குடன் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவுகளைத் தெரிந்துகொள்ள கேரள அரசு புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
walk-in- kiosk எனும் இந்த பரிசோதனை முறையின்படி, ஒரு சிறிய கண்ணாடி அறை ஏற்படுத்தப்பட்டு, அதில் ஒருபுறம் கரோனா அறிகுறி உள்ள நபரும் மறுபுறம் மருத்துவ பணியாளரும் இருப்பர். இருவருக்கும் இடையே உள்ள அந்த தடுப்பு வழியாக மருத்துவ பணியாளர் தங்களது கைகளைப் பாதுகாப்பு கவசத்தின் வழியே விட்டு, அறிகுறியுள்ள நபரிடம் இருந்து ரத்தம் மற்றும் தொண்டைக்குழி திரவ மாதிரிகளை எடுப்பார்.
ஒவ்வொரு சோதனைக்குப் பின்னரும் மருத்துவ பணியாளரின் கையுறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த முறை மூலம் பரிசோதனைகள் எளிமையாவதோடு, இரண்டே நிமிடங்களில் முடிந்துவிடும். இந்த கட்டமைப்பை உருவாக்க 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற அமைப்புகளை மாநிலம் முழுவதும் அமைத்து, சோதனை நடைபெறும் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது கேரள அரசு.