இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மற்றும் கோவாக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பையோடெக் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அந்நிறுவனங்களுக்கு ரூபாய் 4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதி மூலம் வரும் நாட்களில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரித்து மருந்து தட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்தின் விலையை உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூபாய் 400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 600 என விற்கப்படும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா தடுப்பூசி மருந்துகளின் விலையை அறிவிப்பில் ஒப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் ரூபாய் 1,500, ரஷ்யா மற்றும் சீனாவில் தலா ரூபாய் 750- க்கு மேல் கரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யப்படுகிறது. மருந்து உற்பத்தியில் 50% மத்திய அரசுக்கும், 50% மாநில அரசுகளுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரூபாய் 250- க்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளின் விலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு குறைத்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.