Skip to main content

கொல்லப்பட்டும் ஓயாத கௌரி லங்கேஷின் போராட்டங்கள்!

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
கொல்லப்பட்டும் ஓயாத கௌரி லங்கேஷின் போராட்டங்கள்! 

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் தன் வாழ்நாளில் நடத்திய ஒப்பற்ற போராட்டங்களுக்கு பெருமைசேர்க்கும் வகையில், அவர் கொல்லப்பட்ட பின்பும் விருதுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.



தீவிர வலதுசாரி எதிர்ப்பாளரும், இந்துத்துவ கோட்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தவருமான மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது போராட்டங்களை கவுரவிக்கும் வகையில், ரீச் ஆல் உமன் என்ற அமைப்பின் சார்பில் அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் போராளி குலலாய் இஸ்மையால் என்பருக்கும் இதே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தானில் பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர். தீவிரவாத அமைப்பான தாலிபனுக்கு எதிராக கருத்து வெளியிட்டு பலமுறை கொலை மிரட்டல்களுக்கு ஆளானவர். 

அன்னா பொலிட்கோவ்ஸ்கயா எனும் ரஷ்ய பத்திரிகையாளர் சேச்னியா எனும் பகுதியில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மிகத்தைரியமாக குரல் கொடுத்தவர். இதனால், 2006ஆம் ஆண்டு மாஸ்கோவில் அன்னா படுகொலை செய்யப்பட்டார்.

அவர் கொல்லப்பட்ட தினமான அக்டோபர் 7ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சமூக விடுதலைக்காக போராடுபவர்களுக்கு அன்னாவின் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இந்த விருதைப் பெறும் 12வது பெண் கௌரி லங்கேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, பெங்களூருவில் கௌரி லங்கேஷிற்கு பெரியார் விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்