ஹரியான மாநிலம் பரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா. 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஆரியன் மிஸ்ரா கடந்த 23 ஆம் தேதி, தனது நண்பர்களான ஹர்ஷத், ஷங்கே மற்றும் 2 இளம்பெண்களுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது, காரில் பசுவை கடத்தி செல்வதாகப் பசுக் காவலர்கள் என்று தன்னை கூறிக்கொள்ளும் கும்பலுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அந்த கும்பலை சேர்ந்த வருண், கிருஷ்ணா, அதேஷ், சௌரப், அனில கௌசிக் ஆகியோர் ஒரு காரில் ஆரியன் மிஸ்ரா சென்ற காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது ஆரியன் மிஸ்ராவின் நண்பர்களான ஹர்ஷத் மற்றும் ஷங்கே இருவருக்கும் பசுக் காவலர் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாகவே தற்போது அவர் காரில் பின் தொடர்கிறார் என்று நினைத்த இருவரும் காரின் வேகத்தை அதிகரித்துள்ளனர். இதனால் கண்டிப்பாகப் பசுவைத்தான் கடத்தி செல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட அந்த கும்பல் தங்கள் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து காரை நோக்கிச் சுட்டுள்ளனர். அந்த சமயத்தில் காரின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த ஆரியன் மிஸ்ரா மீது குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆரியன் மிஸ்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 5 பேர்கொண்ட கும்பலைக் கைது செய்தது. தற்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.