
பொதுவெளியில் பெண் ஒருவரை, அடையாளம் தெரியாத நபர் தடியால் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில், இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவில், நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு ஆண், ஒரு தடியால் தொடர்ந்து அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்குகிறார். இந்தச் சம்பவத்தை அங்குள்ள மற்ற சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுக்கின்றனர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், ‘தெரியாத ஆண் ஒரு பெண்ணை அடிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோ வைரலானவுடன், எனது குழுவினர் இந்த விஷயத்தை அறிந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியை நாங்கள் கண்டுபிடித்தோம். முக்கிய குற்றவாளி கோக்ரி நிர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.