நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலனே முக்கியம் அதை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். அதில், ''நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மையின் எந்தவித சமரசமும் கிடையாது. நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் மாணவர்கள் நலனே அரசுக்கு முக்கியம். அதைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்கும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், ''இணையதளம் மூலம் நெட் வினாத்தாள் கசிந்ததால் யுஜிசி நெட் 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாள் கசிய விட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறிய தவறு கூட நேராதபடி தேர்வுகளை நடத்த உறுதி பூண்டுள்ளோம்'' எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.