மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த சாக்ஷி மாலிக் இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒரு பெண் தலைவர் வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நடக்கவில்லை என்பதால் தான் ஓய்வு பெறுவதாகவும், இந்த தேர்தலில் பிரிஜ் பூஷண் தொடர்புடையவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.