டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிடோருடன் ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்றார். சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப. சிதம்பரம் இல்லத்திற்கு நுழைந்தனர். முன்னாள் மத்திய அமைச்சரின் இல்லத்தின் கதவை யாரும் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரி ஒருவர் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் இல்லத்திற்குள் நுழைந்தார். அங்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் விசாரிக்கவும், கைது செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில் விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் ப. சிதம்பரம் இல்லத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.