தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.
அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த சந்திரசேகர ராவ்வின் பி.ஆர்.எஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி வீழ்த்தியிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரேவந்த் ரெட்டி நேற்று (07-12-23) மாநில முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டினுள் நிலை தடுமாறி கீழே விழுந்ததையொட்டி நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான சந்திரசேகர் ராவ்வை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது.